ADDED : நவ 29, 2026 07:34 AM

குளித்தலை,:குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., அண்ணா நகர், கல்லடிக்களம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் இடுகாட்டின் சுற்றுச்சுவர், 20 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்டது.
இதை புதுப்பித்தும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி, தாசில்தார், கலெக்டர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, நேற்று மாலை, 5:30 மணிக்கு, தமிழர் தேசம் கட்சி சார்பில், எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட துணை செயலாளர்கள் வேங்காம்பட்டி பிரசாந்த், மேலப்பட்டி விஜி, குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் காசி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, பொறுப்பாளர்கள் பாலா, சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாநில செயலாளர் வழக்கறிஞர் பழனி ராஜா, மாநில அமைப்பு செயலாளர் மகிடேசுவரன், மாநில துணை செயலாளர் தரகம்பட்டி மோகன் ஆகியோர், தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும், குளித்தலை ஒன்றிய நிர்வாகத்தையும், தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தையும் கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கரூர் கிழக்கு மாவட்ட தமிழர் தேசம் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், நெய்தலுார் ஊராட்சி அண்ணா நகர், கல்லடிக்களம் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
