/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைநீர் வடிகால் வாய்க்காலில் செடிகள்
/
மழைநீர் வடிகால் வாய்க்காலில் செடிகள்
ADDED : நவ 13, 2025 03:34 AM
கரூர்: கரூர் அருகே, மழைநீர் வடிகால் வாய்க்காலில் செடி, கொடிகள் அதிகளவில் முளைத்துள்ளது. இதனால், அதிகளவில் மழை பெய்யும் போது, திருச்சி சாலையில் தண்ணீர் ஓடும் அபாயம் உள்ளது.
கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதி, கொளந்தானுார் சாலையில், மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் கரை பகுதியில், மின்சார டிரான்ஸ்பார்மரும், மின் கம்பங்களும் உள்ளன. இந்நிலையில், மழை நீர் வடிகால் வாய்க்காலில் அதிகளவில், செடி கொடிகள் முளைத்துள்ளது.
பல மாதங்களுக்கு முன், கொளந்தானுார் பகுதியில் மழை பெய்த பொது, வடிகால் வாய்க்கால் நிரம்பி, திருச்சி சாலையில் தண்ணீர் ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.
தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கிய நிலையில், மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வார வேண்டும் என, கொளந்தானுார் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், வாய்க்கால் துார் வாரப்படவில்லை. தற்போது, கரூர் மற்றும் கொளந்தானுார் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. நவம்பரில் புயல் காரணமாக, அதிகளவில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொளந்தானுார் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. வரும் நாட்களில் கரூர் நகர் மற்றும் கொளந்தானுார் பகுதியில் அதிகளவில் மழை பெய்யும் போது, வடிகால் வாய்க்கால் நிரம்பி, திருச்சி சாலையில் மீண்டும் தண்ணீர் ஓடும் அபாயம்
உள்ளது.
எனவே, கரூர்-திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதி, கொளந்தானுார் சாலையில் உள்ள, மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வார, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

