/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பருவ மழையை நம்பி உழவு பணிகள் துவக்கம்
/
பருவ மழையை நம்பி உழவு பணிகள் துவக்கம்
ADDED : மே 29, 2024 07:22 AM
குளித்தலை : பருவ மழை தொடர்ந்து பெய்யும் என்ற நம்பிக்கையுடன், விவசாயிகள் தங்களது நிலங்களில் கோடை உழவை தொடங்கி உள்ளனர்.
குளித்தலை அடுத்த, தோகைமலை, கடவூர் யூனியன் -பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக தொடர் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த மழை தற்போது சாகுபடி செய்துள்ள சூரியகாந்தி, சக்கரைவள்ளி கிழங்கு, உளுந்து, கத்திரி, மல்லிகை போன்ற விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக, போதிய மழை பெய்யாமல் வறட்சி நிலவியதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக மழை பெய்துள்ளது. இதில் ஆற்றுவாரிகளில் அமைந்துள்ள தடுப்பணைகள் நிரம்பி, குளங்களுக்கும் மழைநீர் சென்று தேங்கி நிற்கிறது.
மேலும், பருவ மழை தொடர்ந்து பெய்யும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் எதிர்பார்த்து, தங்களது விவசாய நிலங்களில் கோடை உழவை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால், அடுத்த உழவிற்கு பிறகு ஆடிப்பட்டம் விதைகளை மானாவாரி மற்றும் கிணற்று பாசன நிலங்களில், பல்வேறு உணவு பயிர்களின் விதைகளை விதைக்க விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.