/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம்; 10,263 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம்; 10,263 மாணவ, மாணவியர் பங்கேற்பு
இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம்; 10,263 மாணவ, மாணவியர் பங்கேற்பு
இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம்; 10,263 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : மார் 03, 2025 07:27 AM

கரூர்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024--25ம் கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 பொது தேர்வு இன்று தொடங்கி மார்ச், 25- வரை நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வு, 45 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை, 4,741 மாணவர்களும், 5,470 மாணவியரும், தனித்தேர்வர்களாக, 52 பேர் என மொத்தம், 10,263 பேர் எழுதுகின்றனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார வாரியம் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க, 112 நிலையான, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் முதன்மை, வட்டார கல்வி அலுவலர், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு அறைக்குள் மொபைல் போன்ற மின்சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் முறையாக பின்பற்றி நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம், கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது. விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் ஆகியவற்றை குறிப்பிட கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விபரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
பொது தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம், 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக பள்ளி கல்விதுறை தெரிவித்துள்ளது.