ADDED : ஜூன் 12, 2026 05:10 AM

குளித்தலை:குளித்தலை
அடுத்த சிந்தாமணிப்பட்டி போலீசார் சார்பில், தரகம்பட்டியில்
கிராமத்தை நோக்கி காவல்துறை என்ற சிறப்பு நிகழ்ச்சி, டி.எஸ்.பி.,(பொ)
பாலகிருஷ்ண பிரபு தலைமையில் நடந்தது.
சிந்தாமணிப்பட்டி எஸ்.ஐ.,
தங்கச்சாமி முன்னிலை வகித்தார். குளித்தலை டி.எஸ்.பி.,(பொ)
பாலகிருஷ்ணபிரபு, சிந்தாமணிப்பட்டி சரகத்துக்குட்பட்ட
பகுதிகளில், கிராம் கிராமமாக நடந்து சென்று இளைஞர்கள் மற்றும்
பொதுமக்களை நேரில் சந்தித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
மேலும்
அவர் பேசியதாவது: கலாசார விழிப்புணர்வு இல்லாததால், குழந்தை
திருமணங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதனால் திறமைமிக்க பெண்கள்
பாதிப்பதோடு, ஆரோக்கியமான குழந்தைகளை அவர்கள் பெறுவதில்லை.
தொடர்ந்து குடும்பத்தை நடத்தும் வழிமுறை தெரியாமல் இருப்பதால், இன்று
அதிகமான இளம் தம்பதியர், காவல் நிலையங்களிலும்,
நீதிமன்றங்களிலும் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
அதேபோல்,
பணப்பரிமாற்றங்கள் தற்போது, இணைய வழியில் அதிகமாக இருப்பதால்
அனைவரும் கவனமாக இருக்கவேண்டும். செல்போன் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு
கொண்டு தங்களது வங்கி கணக்கு சம்பந்தமாககேட்டால் அவர்களுக்கு
தகவல் தரக்கூடாது. ஒருவேலை மர்ம நபர்கள் தங்களது வங்கி கணக்கில் பணம்
எடுத்தால், '1930' என்ற இலவச எண்ணிற்கு, 4 மணி நேரத்தில் புகாரளித்தால்
உடனடியாக தடுத்து மீண்டும் பணத்தை திரும்பபெற முடியும்.
மேலும்,
குழந்தைகளுக்கு ஆபத்து மற்றும் குழந்தை திருமணங்களை தடுக்க, '1098'
என்ற இலவச எண்ணிற்கும், பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், '181'
என்ற இலவச எண்ணிற்கும் அழைத்து காவல்துறை உதவிகளை பெறலாம்.
காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து
செயல்பட்டால் குற்றசம்பவங்களை பெரிய அளவில் குறைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
