/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு
/
சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு
ADDED : ஜூலை 10, 2025 01:17 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறுதானியங்கள் மற்றும் பயறு வகை பயிர்களில், மாநில அளவில் அதிக உற்பத்தி அடையும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித்திட்டம் மூலம் அரவக்குறிச்சி வட்டாரத்தில், 2025-26ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
காலவரம்பு நிர்ணயம்
இத்திட்டத்தில் மாநில அளவில் கம்பு மற்றும் பச்சைப்பயறு பயிர்களில் அதிக அளவில் விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக, 2,50,000, இரண்டாவது பரிசாக, 1,50,000, மூன்றாவது பரிசாக, 1,00,000 ரொக்கப்பரிசாக வழங்கப்படும்.
பயிர் விளைச்சல் போட்டிக்கான கடைசி அறுவடை தேதி 2026 மார்ச் 15 என காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் நடைபெறும், பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 5 ஏக்கரில் கம்பு அல்லது பச்சைப்பயறு சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், 50 சென்ட் பரப்பளவில் உள்ள பயிர் போட்டிக்காக அறுவடை செய்யப்பட வேண்டும். இப்போட்டியில் நில உடமைதாரர்கள் மற்றும் நில குத்தகைதாரர்கள் பங்கு பெற தகுதி உடையவர்.
ரொக்கப்பரிசு
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், நுழைவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி உரிய விண்ணப்பத்துடன் சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அதிகபட்சம் அறுவடைக்கு, 30 நாட்களுக்கு முன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயிர் அறுவடையானது, மாநில அளவிலான பயிர் விளைச்சல் நடுவர் குழு முன்னிலையில் நடத்தப்பட்டு, வரையறுக்கப்பட்ட ஈரப்பதத்துடன் கூடிய விளைபொருளின் மகசூலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முதல் மூன்று இடம் பெறும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள், கூடுதல் விபரங்களை பெற, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.