ADDED : ஜன 06, 2024 11:21 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால், அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முருங்கை உற்பத்தி குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது.
தற்போது கரூர் மாவட்டத்தில், அதிகளவில் பனிப்பொழிவால் முருங்கை உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கை, 100 முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நவம்பரில், அதிகபட்சமாக, 80 ரூபாய் வரை விற்றது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நடப்பாண்டு வழக்கத்துக்கு மாறாக, தொடர் மழை, கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால், முருங்கை மரங்களில் உள்ள, பூக்கள் எளிதாக விழுந்து விடுகிறது. இதனால் காய் உற்பத்தி எதிர்பார்த்த அளவில் இல்லை. மேலும் காய்கள் முழு வளர்ச்சியடையாமல், சிறிய அளவில் பிசுபிசுத்து காணப்படுகிறது. மார்கழி மாதம் துவங்கிய நிலையில், அதிகளவில் பனிப்பொழிவு உள்ளது. வரும் தை மாதம் திருமணம் சீசன் உள்ளிட்ட, சுப காரியங்கள் தொடங்கும் நேரத்தில் முருங்கைக்கு அதிகளவில் தேவை ஏற்படும். பனிப்பொழிவால் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போது, முருங்கை விலை அதிகரித்துள்ள நிலையில், தை மாதத்தில் முருங்கை விலை, ஒரு கிலோ, 140 ரூபாயை தாண்ட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.