/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டா வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
/
பட்டா வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 25, 2025 01:23 AM
நாமகிரிப்பேட்டை, தொப்பப்பட்டி கிராம மக்களுக்கு இலவச பட்டா வழங்க கோரி, 30க்கும் மேற்பட்டோர் நாமகிரிப்பேட்டை ஆர்.ஐ., அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டி கிராமம் தேவேந்திர குல சமுதாயத்தை சேர்ந்த 64 பேரும், பிற்பட்ட வகுப்பை சேர்ந்த, 4 பேரும், இலவச வீட்டு மனை பட்டா வேண்டி கடந்த 2023ம் ஆண்டு மனு அளித்திருந்தனர். கடந்த இரு ஆண்டுகளில், பல்வேறு அதிகரிகளிடம், 23 முறை மனு அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ராசிபுரம் தாசில்தார் விசாரணை நடத்தி, வீட்டுமனை வழங்குவதாக கூறி எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளித்ததாக தெரிகிறது. ஆனால், இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. இதை கண்டித்து, நேற்று நாமகிரிப்பேட்டை ஆர்.ஐ.,அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனர். கடந்த, 22ம் தேதி ராசிபுரம் தாசில்தார் சசிகுமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். குறிப்பிட்ட இடத்தை சர்வேயர் மூலம் ஆய்வு செய்வதாக கூறினார்.
இந்நிலையில் நேற்று தொப்பப்பட்டி மக்கள், நாமகிரிப்பேட்டை ஆர்.ஐ.அலுவலகம் முன் குடம், சமையல் பாத்திரங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் சசிகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 3 மாதங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூ., கிளை செயலர் குப்பண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலர் சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.