ADDED : ஜூலை 23, 2026 06:13 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த வரவனை பஞ்., பாப்பனம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில்,
அப்பகுதியில் உள்ள பொது பாதையை, த.வெ.க., ஒன்றிய நிர்வாகி அரவிந்தன்
ஆக்கிரமிப்பு செய்து, பாதையை அடைத்துள்ளார். இதனால், அந்த வழியாக
சென்று வந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் மிகவும் சிரமத்திற்கு
ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் மனு
அளித்துள்ளனர்.
நடவடிக்கை இல்லாததால், சாமானிய மக்கள் நல
கட்சியினர் மற்றும் தே.மு.தி.க.,வினர். நேற்று கழுத்தில் புகார் மனுவை
மாலையாக அணிந்து கொண்டும், கடவூர் தாசில்தார் அலுவலகத்திற்கு
ஊர்வலமாக சென்றனர். அப்போது, கடவூர் தாசில்தார் வெளியே
சென்றுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால், காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், ஒரு மணி நேரம் கழித்து வந்த
தாசில்தார் பானுமதியிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட
தாசில்தார், 'ஒரு வார காலத்திற்குள் பிரச்னைக்கு சுமுக தீர்வு
காணப்படும்' என, உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
