ADDED : மார் 29, 2026 02:34 AM
குளித்தலை :குளித்தலையில், சரக்கு வாகனம் மோதி ரயில்வே கேட் முறிந்தது.குளித்தலை, மணப்பாறை நெடுஞ்சாலையில், திருச்சி-கரூர் மார்க்கமாக ரயில்வே பாதை செல்கிறது. நேற்று காலை, 10:00 மணியளவில் இந்த பாதை வழியாக சரக்கு ரயில் வருவதை முன்னிட்டு, இங்கிருந்த ரயில்வே கேட்டை பெண் பணியாளர் மூடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தோகைமலை நோக்கிச் சென்ற சிறிய சரக்கு வாகன டிரைவர் கவனிக்காமல் சென்றதால், ரயில்வே கேட் மீது மோதியது. இதில் கேட் முறிந்தது. இதையடுத்து, தற்காலிகமாக இரும்பு துாண் மூலம், ரயில் பாதைக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை தடை செய்தார். பின்னர் நடந்த சம்பவத்தை, ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார், மணப்பாறை நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை, மாற்று பாதையில் அனுப்பினர். மதியம் 2:00 மணியவில் ரயில்வே கேட் சரி செய்யப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
