UPDATED : அக் 18, 2026 07:54 AM
ADDED : அக் 18, 2026 06:45 AM

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த, 14ம் தேதி தொடங்கியது.
இதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு, பல பகுதிகளில் மழை பெய்தது. மேலும், நேற்று மதியம் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்ட மாக காணப்பட்டது. அதை தொடர்ந்து மாலையில், குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 31.80, அரவக்குறிச்சி, 4.20, அணைப்பாளையம், 5, க.பரமத்தி, 1, தோகைமலை, 10, கிருஷ்ணராயபுரம், 48, மாயனுார், 35, பாலவிடுதி, 51, கடவூர், 6, பாலவிடுதி, 5, மயிலம்பட்டி, 6.50 மி.மீ., மழை பெய்தது. மாவட் டம் முழுவதும், 221.50 மி.மீ., மழையும், சராசரியாக, 18.46 மி.மீ., மழையும் பதிவானது.
* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,604 கன அடி தண்ணீர் வந்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு, 9,604 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட் டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 830 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்காலிக தரைப்பாலம் மூழ்கியது
குளித்தலை பகுதியில் இரண்டு நாட்களாக பெய்த மழையால், சிவாயம் காட்டுவாரி மற்றும் கொடிங்கால் வடிகால் வாய்க்கால் இணையும் பகுதியான, மேட்டுமருதுார் கிராமத்தில் உள்ள தற்காலிக பாலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் மருதுார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி, நல்லுார், பேரூர், கல்லை, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் தரை பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் நெல், வாழை தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், மேட்டுமருதுார் விவசாயிகள், தன்னார்வலர்கள் இணைந்து, பாலத்தில் தேங்கிய ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., எல்.வி.பி., நகரில், ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக, எல் வி.பி., நகரில், 10க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து நின்றது. தண்ணீரை அகற்றக்கோரி, நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆண்டாங்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து, தகவல் அறிந்த தான்தோன்றிமலை பஞ்., யூனியன் பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி, எல்.வி.பி., நகர் மக்களை சந்தித்து, மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறினார். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
* சிவாயம், பாப்பகாப்பட்டி, வயலுார், சேங்கல், வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, புனவாசிப்பட்டி, பஞ்சப்பட்டி, வீரியபாளையம், பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வாழை, வெற்றிலை, மரவள்ளி கிழங்கு, கரும்பு, நெல் பயிர்களுக்கு மழைநீர் கிடைத்துள்ளது.

