ADDED : ஏப் 26, 2024 04:00 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, 3,500அடி உயரத்தில் உள்ளது. 14 பஞ்., அடங்கிய யூனியன் மலைப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. கொல்லிமலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மிக கனமழை பெய்து வந்த நிலையில், இந்தாண்டு அதற்கு நேர் மாறாக மழையே இல்லாமல் மலைப்பகுதி முழுவதும் வானம் பார்த்த பூமியாக மாறியுள்ளது. இதனால், இங்குள்ள அருவிகளில் தண்ணீர் முற்றிலும் வற்றிய நிலையில், இந்தாண்டு கடந்த, 10 ஆண்டுகள் இல்லாத அளவில் மலை கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கொல்லிமலை வாழவந்தி நாடு பஞ்,, எம்.ஜி.ஆர் நகர், எரிச்சக்காடு, பி.தண்ணிமாத்திப்பட்டி ஆகிய மலை கிராமங்களில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு பஞ்., மூலம் கிணறு வெட்டி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த பகுதியில் உள்ள கிணறுகள் கடந்த சில ஆண்டுகளாக துார் வாரப்படாததால், தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் கூறியதாவது:
கொல்லிமலையில் குடிநீர் பற்றாக்குறை இருந்ததில்லை. ஆனால், இந்தாண்டு போதிய மழையில்லாததால், பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்டோக்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, கிணறுகளை துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

