ADDED : பிப் 19, 2026 05:09 AM

குளித்தலை: காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வளையப்பட்டி ஜெயராமன், கரூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
குளித்தலை அருகே, காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கடம்பவனேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தால், காசியில் தரிசனம் செய்ததற்கு நிகராகும். குளித்தலையை சுற்றி, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கோவில் திருவிழா மற்றும் குடமுழுக்கு விழாவுக்கு பலர் வருவர். மேலும், ஆடி 18 மற்றும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகின்றனர்.
கோவில் எதிரே திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, காவிரி ஆற்று படுகை உள்ள விநாயகர் கோவில் மற்றும் காவிரி ஆற்றில் பக்தர்கள், பொதுமக்கள் நீராடுவதும், உயிரிழந்த பிரேதங்களை இந்த வழியாக மயானத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய பாதையாக இருந்து வருகிறது.
இந்த பாதை மண் சாலையாகவும், மணல் திட்டுகளாகவும் இருப்பதால் கார், பைக், கனரக வாகனங்கள் வந்து செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி, தார்ச்சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
