சாலை ஆக்கிரமிப்பு: நெரிசலில் தத்தளிக்கும் வாகனங்கள்
சாலை ஆக்கிரமிப்பு: நெரிசலில் தத்தளிக்கும் வாகனங்கள்
ADDED : செப் 14, 2026 06:57 AM
கரூர்,:கரூர் - கோவை சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக, வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
கரூர்
மாநகராட்சியின் முக்கிய சாலையாக, கோவை சாலை, ஜவஹர் பஜார்,
காமாட்சியம்மன் கோவில் வீதி, செங்குந்தபுரம் உள்ளன. இங்குள்ள
வர்த்தக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி இல்லை. பைக் உள்ளிட்ட
வாகனங்களில் வரும் பொதுமக்கள், அவற்றை சாலையிலேயே நிறுத்திவிட்டு
செல்கின்றனர். பல நிறுவனங்கள் சாலையோரம் ஆக்கிரமித்துள்ளன.
இதனால், ஒதுங்க வழியின்றி, கடும் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
கோவை,
ஜவகர் பஜார் சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள்
அதிகம் உள்ளன. குறிப்பாக, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா ரவுண்டானா,
கோவை சாலை பகுதியில், ஜவுளி கடைகள், பேக்கரிகள் உள்ளன. இங்கு,
எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அவ்வாறு
வாகனங்களில் வருபவர்கள், இங்குள்ள கட்டடங்களில் பார்க்கிங் வசதி
இல்லாததால், சாலையோரத்திலேயே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து, ஜவகர் பஜார் சாலையில்,
இருசக்கர வாகனம், கார் முதலான வாகனங்களும் வரிசையாக நிற்கின்றன.
இதேபோல்,
ரவுண்டானாவில் இருந்து, கோவை செல்லும் சாலையிலும், சாலையோரத்தில்
தான் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதுமட்டுமல்லாது, கோவை
சாலையை, தனியார் திரையரங்கம் ஆக்கிரமித்துள்ளது. தங்கள் தியேட்டர்
வெளியில் வாகனம் நிறுத்த கூடாது என்பதால், பாதி சாலை ஆக்கிரமித்து
கம்பி வைத்து கயிறு கட்டி வைத்துள்ளனர்.
இதுபோல் பல நிறுவனங்கள்
சாலையை ஆக்கிரமித்துள்ளன. ஏற்கனவே சென்டர் மீடியன் மூலம்
பிரிக்கப்பட்டதால், சாலை அகலம் குறைவாக உள்ளது. அதிலும், பார்க்கிங்
வாகனங்கள் அடைத்துக்கொண்டு விடுவதால், மற்ற வாகனங்கள் செல்ல
முடியாமல் திண்டாட்டமாகி விடுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
