/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் மீண்டும் துவங்கியது மணல் திருட்டு
/
அமராவதி ஆற்றில் மீண்டும் துவங்கியது மணல் திருட்டு
ADDED : நவ 07, 2024 05:55 AM
கரூர்: அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் மைய பகுதியில் மணல் திருட்டு கன ஜோராக நடந்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப் பகுதிகளில், மணல் குவாரிகள் அமைக்க கூடாது என, உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டிகளில், இரவு நேரங்களில் மணல் அள்ளி செல்வதை, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவ்வப்போது சில வழக்குகள் மட்டும் போலீசார் தரப்பில் பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக அமராவதி ஆற்றில் கடந்த, செப்டம்பர் மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, அமராவதி ஆற்றுப்பகுதியில், சம்பா நெல் சாகுபடி பணி துவங்கியுள்ளது. மழை காரணமாக, அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றின் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் செல்கிறது. ஆற்றின் மறுபக்கம் கரையோரம் மற்றும் மையப் பகுதிகளில் தண்ணீர் செல்லாத இடங்களில், இரவு நேரத்தில் மணலை அள்ளி செல்ல வசதியாக, குவித்து வைத்துள்ளனர்.
குறிப்பாக, அமராவதி ஆற்றில் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு, 200 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரும், பல கிளை வாய்க்காலுக்கு செல்வதால், ஆற்றில் குறைந்தளவே தண்ணீர் வருகிறது.
அதை பயன்படுத்தி, கரூர் மாவட்டத்தில், ராஜபுரம், சின்னதாராபுரம், அணைப்பாளையம், சுக்காலியூர் பெரிய ஆண்டாங்கோவில், கோயம் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு மீண்டும் கன ஜோராக துவங்கியுள்ளது. அதை, கண்டு கொள்ளாமல், வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மணல் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.