/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெறிநாய் கடிக்கு பலியாகும் ஆடுகள்; கால்நடை விவசாயிகள் கவலை
/
வெறிநாய் கடிக்கு பலியாகும் ஆடுகள்; கால்நடை விவசாயிகள் கவலை
வெறிநாய் கடிக்கு பலியாகும் ஆடுகள்; கால்நடை விவசாயிகள் கவலை
வெறிநாய் கடிக்கு பலியாகும் ஆடுகள்; கால்நடை விவசாயிகள் கவலை
ADDED : மார் 03, 2025 07:30 AM
கரூர்: க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆடுகளை, வெறிநாய்கள் கடிப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால், கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பிரத்யேகமாக அமைக்கப்படும் பட்டிகளில், ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கிராமப்புறங்களில் நாய்கள், அடிக்கடி பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும், 300க்கும் மேற்பட்ட ஆடுகள், வெறிநாய்களின் கடிக்கு பலியாகியுள்ளன. இந்நிலையில், க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பனைப்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரது ஆட்டு பட்டியில், நேற்று முன்தினம், 10 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து இறந்திருந்தன. க.பரமத்தி அருகே, தனியாச்சலம் என்பவரது ஆட்டு பட்டியில், நேற்று, 10 ஆடுகள், வெறிநாய் கடிக்கு பலியாகின. இவ்வாறு வெறிநாய் கடிக்கு ஆடுகள் இரையாகி வருவதால், கால்நடை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஆடு வளர்ப்பு மூலம் தான், விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் வெறிநாய்களால், ஆடுகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. அவைகள் கடித்து ஆடுகள் இறப்பால், பொருளாதார நெருக்கடி உண்டாகிறது. வங்கி கடன்களை, திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. க.பரமத்தி பகுதிகளில் சுற்றித்திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.