மாயனுார் கதவணையில் 'ஷட்டர்' சேதம் தண்ணீர் சேமிப்பதில் தொடரும் சிக்கல்
மாயனுார் கதவணையில் 'ஷட்டர்' சேதம் தண்ணீர் சேமிப்பதில் தொடரும் சிக்கல்
ADDED : ஜூலை 04, 2026 11:06 PM

கரூர்: மாயனுார் கதவணையில், 12 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப் படாததால், 50 சதவீதம் 'ஷட்டர்' சேதமாகி, தண்ணீரை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மாயனுாரில், காவிரி ஆற்றின் குறுக்கே, 1,233 மீட்டர் நீளத்திற்கு, 98 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட கதவணை, 2014 முதல் பயன்பாட்டில் உள்ளது. இதில், 4.63 லட்சம் கன அடி வெள்ள நீர் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவணையில், 1.05 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
கடந்த, 2015, 2018, 2019ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, அதிகபட்சமாக, 2.47 லட்சம் கன அடி தண்ணீர் கதவணை மூலம் வெளியேற்றப்பட்டது. வெள்ளப்பெருக்கின் காரணமாக, கதவணையின் அடித்தள கட்டுமானங்களில் சேதம் ஏற்பட்டது.
இதனால், 2022 பிப்ரவரியில், 185.26 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கூட, ஷட்டர் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த, 2014ம் ஆண்டு முதல் கதவணை ஷட்டர்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில், 9 முறை கதவணை வழியாக வெள்ள நீர் சென்றுள்ளது. கதவணையில் பலமுறை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், கட்டுமானத்திற்கு மட்டுமே சீரமைப்பு வேலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, ஒருமுறை கூட ஷட்டர்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை. இதனால், 50 சதவீதம் ஷட்டர்கள் சேதமாகி உள்ளன.
அவ்வப்போது, அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போதும், மூடும் போதும் பிரச்னை ஏற்படும். அப்போது மட்டுமே பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, ஷட்டர்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இங்கு, 12 ஆண்டுகளுக்கு மேலாக ஷட்டர்களில் பராமரிப்பு பணி செய்யவில்லை.
கதவணையில் நீர் சேமித்து வைக்கும் போது, சேதமான ஷட்டரில் தண்ணீர் வெளியேறி வருகிறது. பல ஷட்டர்கள் துருப்பிடித்து பலவீனமான உள்ளதால், எப்போது வேண்டுமானலும் உடையும் அபாயம் உள்ளது. உடனடியாக ஷட்டர்களின் ரப்பர் 'ஷீல்டு'களை புதுப்பிக்க வேண்டும். சேதமான இரும்பு கயிறுகளை மாற்ற வேண்டும். துருப்பிடிக்காத பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
