ADDED : ஏப் 06, 2024 03:57 AM
வாய்க்காலில் கான்கிரீட்
எதிர்ப்பு தெரிவித்து மனு
காங்கேயம்: ஈரோடு மாவட்டம் அரச்சலுார் அருகேயுள்ள கண்ணம்மாபுரம் பகுதி விவசாயிகள், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க வேண்டாம் என்று கூறி, கீழ்பவானி பாசன கால்வாய் காங்கேயம் உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமாரிடம், நேற்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
கீழ்பவானி பாசன கால்வாயில் மைல், 75.3 கிளை வாய்க்கால், இரண்டாம் நெம்பர் கால்வாயில், மதகு எண் 9, 10 அருகில், 70 ஆண்டுகளாக மண் கரை பலமாக இருந்து வருகிறது. இதையடுத்து ஒரு பாலமும் உள்ளது. இதை இடித்து கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் அருகில் இருபுறமும், 100 அடி நீளத்திற்கு மண் கரையை அகற்றி விட்டு கான்கிரீட் போடுவதற்கு பணி தொடங்கியுள்ளது. ஆனால், பழைய கட்டுமானம் உள்ளதை உள்ளபடியே செய்ய வேண்டும், மண் கரையை மண்ணை கொண்டு பராமரித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
பி.ஏ.பி., வாய்க்காலில்
ஆண் குழந்தை சடலம்
காங்கேயம்: காங்கேயம் அருகே பொத்தியபாளையம் பிரிவில், பி.ஏ.பி., கிளை வாய்க்காலில், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை சடலம் நேற்று காலை மிதந்து வருவதா,க அப்பகுதி மக்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை உடலை வீசி சென்றது யார் என்று, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடிநீர் கேட்டு போராட்டம்
தாராபுரம்: தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகரில், பத்து நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட மக்கள், ஊராட்சி அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் இல்லாத நிலையில், தகவலறிந்து யூனியன் அதிகாரிகள் சென்றனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறி சமாதானம் செய்தனர். இதனால் மக்கள் திரும்பி சென்றனர்.
தாராபுரத்தில் போலீசார் பேரணி
தாராபுரம்: லோக்சபா தேர்தலில், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், தாராபுரம் வடதாரை பகுதியில், நேற்று மாலை போலீஸ் அணிவகுப்பு பேரணி நடந்தது. டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் துவங்கிய பேரணி, சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி, வசந்த ரோடு பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று போலீஸ் ஸ்டேஷனை அடைந்தது. இதில் குஜராத் மாநில போலீசார் உள்பட, 70க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருப்பூர்: 'வார விடுமுறையை முன்னிட்டு இன்றும், நாளையும் திருப்பூரில் இருந்து, 40 சிறப்பு பஸ் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழக, திருப்பூர் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து பிற மாவட்டம் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. அவ்வகையில், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், அரூர், திருவண்ணாமலை பகுதிக்கு, 10 பஸ்கள், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 15 சிறப்பு பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிக்கு, 15 சிறப்பு பஸ்கள் என மொத்தம், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமென, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

