ADDED : ஏப் 27, 2024 09:42 AM
பெரியகாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
கிருஷ்ணராயபுரம்: கள்ளப்பள்ளியில் உள்ள, பெரியகாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி காவல் வீதியில், பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது. கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு கடந்த, 25ல் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு விநாயகர் பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் செய்யப்பட்டது.
நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை தீபாராதனை நடந்தது. 8:30 மணிக்கு பெரியக்காண்டியம்மன் கோவில் சுதை சிலைக்கு கும்பாபி ேஷகம் நடத்தப்பட்டது. பின்னர் விநாயகர், பெரியக்காண்டியம்மன், பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கரூர் அருகே சாலையில் கிடந்த பணம்; கைப்பற்றிய பறக்கும் படை
கரூர்: கரூர் அருகே, சாலையில் கிடந்த பணத்தை பறக்கும் படை அலுவலர் கைப்பற்றினார்.கரூர் சட்டசபை தொகுதி பறக்கும் படை அலுவலர் கோமதி. இவர் கடந்த, 18 இரவு கரூர் அருகே, சுங்ககேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு, ஓட்டுக்கு பணம் கொடுக்க நின்று கொண்டிருந்த, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையில் வைத்திருந்த, 24 ஆயிரத்து, 900 ரூபாயை கீழே போட்டு விட்டு ஓடி விட்டார்.கீழே கிடந்த பணத்தை கைப்பற்றிய, பறக்கும் படை அலுவலர் கோமதி, போலீசில் புகார் செய்தார். அதன்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குப்பை எரிப்பதை தடுக்க வேண்டும்
கரூர்: கரூர் அருகே வாங்கல்-நாமக்கல் மோகனுார் சாலையில் பொதுமக்கள், குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் மீது சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால், மோகனுார் சாலை நாள்தோறும் புகை மண்டலமாக உள்ளது. அப்பகுதியில், வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடை மற்றும் வீடுகள் உள்ளது.
இதனால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதை பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், வாங்கல்-மோகனுார் சாலையில், புகை மூட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
லாலாப்பேட்டை பகுதியில் வாத்து விற்பனை மும்முரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், கொடிக்கால் தெரு, சிந்தலவாடி, லாலாப்பேட்டை ஆகிய பகுதியில் தொழிலாளர்கள் இறைச்சி வாத்துகள் வளர்த்து வருகின்றனர். இறைச்சி வாத்துகள் விவசாய விளை நிலங்களில் நீர் நிலைகள் மற்றும் சிறு பாசன வாய்க்கால் நீர் நிலைகளில் வளர்க்கப்படுகிறது.
நீர் நிலைகளில் உள்ள மண்புழுக்களை, வாத்துகள் உணவாக எடுத்துக் கொள்கிறது. மேலும் வளர்க்கப்படும் வாத்துகள் உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது. வாத்து ஒன்று, 350 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. விடுமுறை தினங்களில், வாத்து இறைச்சிகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சிறு தொழில் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.
புதிய தார் சாலை அமைக்கணும்
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக, குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால், குழிகளை சரிவர மூடவில்லை. இதனால், அந்த பகுதியில், பெரும்பாலான வீதிகளில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல், அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே புதிதாக தார் சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
கரூர்: கரூர் அருகே, வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக, அ.தி.மு.க., நிர்வாகி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் சட்டசபை தொகுதி பறக்கும் படை அலுவலர் தியாகராஜன். இவர் கடந்த, 18 ல் வாங்கப்பாளையம் செக்போஸ்ட் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக, கரூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அஜித்குமார், 27, என்பவர் மீது, போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, வெங்கமேடு போலீசார் அஜித்குமார் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

