ADDED : ஜன 20, 2024 09:49 AM
க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி: கரூரிலிருந்து, கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தீ விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவற்றை தடுக்க க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை.
கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரமாவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆற்று பாலத்தில் கழிவுகள் கொட்டுவதால் அபாயம்
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே, நங்காஞ்சி ஆற்று பாலம் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ளது. பள்ளப்பட்டியில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள், இப்பாலத்தை உபயோகித்து வருகின்றனர்.
இப்பாலத்தில் இறைச்சி கழிவு பொருட்களை மூட்டையாக கொண்டு வந்து வீசி விட்டு செல்கின்றனர். மேலும் மருத்துவ கழிவுகள், நகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுகள் உள்ளிட்டவைகளை பாலத்தின் அடியில் சேகரித்து வைக்கின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சேகரித்த கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுகாதார சீர்கேடும், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. கழிவுகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலை செடிகளில் களை அகற்றம் தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், கடலை செடிகளில் வளர்ந்துள்ள களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் பரவலாக விவசாய நிலங்களில் கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கு, கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது, கடலை செடிகள் நடுவே அதிகளவில் களைகள் முளைத்துள்ளன. இதனால் செடிகள் வளர்ச்சி தடைபட்டது.
இந்நிலையில், விவசாய தொழிலாளர்கள் கொண்டு, கடலை செடிகளில் வளர்ந்துள்ள களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.
குளித்தலை விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் பயிற்சி
குளித்தலை: குளித்தலை வட்டாரத்தில், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 30 விவசாயிகளை கொண்டு, 20 ஹெக்டேர் விதைப்பதற்கு, 'குளித்தலை இயற்கை விவசாயம்' என்ற பெயரில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவை சேர்ந்த விவசாயிகளுக்கு, அங்கக பண்ணையம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட விதைச்சான்று துறை உதவி இயக்குனர் மணிமேகலை, அங்கக சான்று பெறுவதற்கு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்கி கூறினார். உதவி இயக்குனர் லலிதா, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.
வேளாண் அலுவலர் சுரேந்தர், இயற்கை விவசாய முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பஞ்சகாவியா, பூச்சி விரட்டி, உயிர் வேலி அமைப்பது குறித்து, செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.
விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். வேளாண் அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.
சுகாதார நிலையத்தை சுற்றி கழிவுநீர் தேக்கம்
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் சமுதாயக்கூடம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் அமைந்துள்ளது. இங்கு, கர்ப்பிணி பெண்கள், மருத்துவ ஆலோசனை பெற அதிகளவில் வந்து செல்கின்றனர்.
ஆனால், சுகாதார நிலைய கட்டடத்தின் தெற்கு பகுதியில் கழிவுநீர் தேங்கி கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில், மழை நீர், கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பஞ்., நிர்வாகம், சுகாதார நிலையத்தை சுற்றி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.