கரூர் சுற்று வட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் திடீர் மழை
கரூர் சுற்று வட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் திடீர் மழை
ADDED : ஆக 05, 2026 05:14 AM

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
தென் கடலோர தமிழக பகுதிகளில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என, நேற்று முன்தினம் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. பிறகு கரூர் டவுன், திருமாநிலையூர், பெரிய ஆண்டாங்கோவில், காந்திகிராமம், தான் தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதி
பாளையம், சுங்ககேட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, 5:30 மணிக்கு குளிர்ந்த காற்றுடன் துவங்கிய மழை, பல்வேறு பகுதிகளில், 6:00 மணி வரை விட்டு விட்டு பெய்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 900 கன அடியாக இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 2.75 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
