/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் கழிவுநீர் வாய்க்காலாக மாறிய நங்காஞ்சி ஆறு
/
பள்ளப்பட்டியில் கழிவுநீர் வாய்க்காலாக மாறிய நங்காஞ்சி ஆறு
பள்ளப்பட்டியில் கழிவுநீர் வாய்க்காலாக மாறிய நங்காஞ்சி ஆறு
பள்ளப்பட்டியில் கழிவுநீர் வாய்க்காலாக மாறிய நங்காஞ்சி ஆறு
ADDED : பிப் 09, 2025 01:00 AM
அரவக்குறிச்சி, :பள்ளப்பட்டியில் உள்ள, நங்காஞ்சி ஆற்றை துாய்மைப்படுத்தி, நீர் ஆதாரத்திற்கு உகந்ததாக மாற்ற விவசாயிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி, இடையகோட்டை பகுதி அணையில் இருந்து, 52 கி.மீ., துாரம் பயணம் செய்கிறது நங்காஞ்சி ஆறு. கரூர் மாவட்டத்தில் உள்ள மலைக்கோவிலுார் பகுதியில் நங்காஞ்சி ஆறு, குடகனாறு ஆகியவை அமராவதியில் கலக்கிறது. இந்த ஆற்றை நம்பி, இரண்டு மாவட்டம் சேர்த்து, 6,500 ஹெக்டேருக்கு மேல் கடந்த காலங்களில் பாசனம் செய்து வந்தனர். ஆற்றுப்படுகையில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீராகவும் நங்காஞ்சி ஆறு இருந்து வந்தது.
விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஆற்றுப்படுகை அமைக்கப்பட்டது. தற்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய முறையில் வாய்க்கால்களை துார்வாராததால், கடந்த சில ஆண்டுகளாக ஆற்று படுகையில் தண்ணீர் வருவது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளப்பட்டியில், 20 ஆண்டுகளுக்கு முன், 70 அடி அகலம் கொண்ட தடுப்பணை, நிலத்தடி நீர் உயர்வதற்காக கட்டப்பட்டது. ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்கால்களை துார்வாராததால், ஆற்றுப்படுகை முழுவதும் கழிவுநீர் வாய்க்காலாகவும், பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாகவும் சாலையோர இறைச்சி, ஹோட்டலில் பயன்படுத்தக்கூடிய கழிவுகள் கொட்டும் பகுதியாகவும் மாறி உள்ளது. கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், நங்காஞ்சி ஆற்றில் விடுகின்றனர். இதனால் வாய்க்கால் கழிவுநீர் போன்று மாறி உள்ளது.
இது குறித்து விவசாய சங்கங்கள், பொதுமக்கள், நங்காஞ்சி ஆறு மீட்புக் குழு என பல்வேறு தரப்பினர், மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளித்தும் ஆற்றுப்படுகையை கண்டுகொள்ளவில்லை. இதனால், அரவக்குறிச்சி பகுதி முழுவதும் தற்போது வறட்சி பகுதியாக மாறி, இப்பகுதி மக்கள் குடிநீருக்கும் தங்களது அன்றாட தேவைக்கும் தண்ணீரை, விலைக்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, நகராட்சி தலைவர் முனவர் ஜான் கூறுகையில்,'' பள்ளப்பட்டி பகுதியில் இறைச்சிக்கடை மற்றும் வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். நங்காஞ்சி ஆற்றிலோ அல்லது பாலத்தின் அடியிலோ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நங்காஞ்சி ஆற்றை துாய்மைப்படுத்துவதற்கு, அதிகபட்ச நிதி தேவைப்படுவதால், தமிழக அரசிடம் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.