/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாம்புகளின் புகலிடமானது ஆர்.டி.ஓ., அலுவலகம்
/
பாம்புகளின் புகலிடமானது ஆர்.டி.ஓ., அலுவலகம்
ADDED : ஜன 22, 2024 12:03 PM
கரூர்: கரூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலமாக தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம், வணிகவரி அலுவலகம், ஆபீசர்ஸ் கிளப் மற்றும் ஆர்.டி.ஓ., முகாம் அலுவலகம் ஆகியவையும் அமைந்துள்ளன. இதனால் நாள்தோறும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 100க்கும் மேற்பட்ட ஊழியர்களும், ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அலுவலக வளாகத்தில் ஊழியர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பழுதான நிலையில் உள்ளது. பயன்படுத்த முடியாத கழிப்பிடங்களை சுற்றி, முட்புதர்கள் அதிகளவில் முளைத்துள்ளது. அதில், கடந்த சில நாட்களாக கட்டுவிரியன், நாகபாம்புகள் அதிகம் உலா வருகிறது. சில சமயங்களில் பகல் நேரத்தில், அரசு அலுவலகத்தில் பாம்புகள் படையெடுப்பதால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆர்.டி.ஓ., விசாரணைக்காகவும், புகார் கொடுக்க வரும் பொது மக்களும், பகல் நேரத்தில் பாம்புகள் நடமாட்டத்தை
பார்த்தபடி பீதியில் செல்கின்றனர். இரவு நேரத்தில், மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரிவது இல்லை. இதனால் தற்கொலை வழக்கு, ஊர் பிரச்னை, அமைதி பேச்சு வார்த்தை உள்ளிட்ட ஆர்.டி.ஓ., விசாரணைக்கு வரும் பொது மக்கள் இருட்டில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், சுற்றித்திரிந்த நாய்கள் மர்மமான முறையில் இறந்தன. அதை அகற்ற வந்த துாய்மை பணியாளர்கள், பாம்பு கடித்ததால் நாய்கள் இறந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
எனவே அலுவலக வளாகத்தில் முளைத்துள்ள முட்புதர்களை அகற்றி, பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பிடங்களை சீரமைக்க வேண்டும் என ஊழியர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.