/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்
/
மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்
ADDED : பிப் 22, 2024 07:28 AM
குளித்தலை : குளித்தலை ரயில் நிலையத்தில், பாலக்காடு விரைவு ரயில் மூன்று மணி நேரம் நின்று சென்றதால், ஆவேசமடைந்த பயணிகள் ரயில்வே நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் இருந்து, குளித்தலை வழியாக பாலக்காடு வரை விரைவு பயணிகள் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்து மதியம், 1:30 மணிக்கு புறப்படும் ரயில் 2:30 மணிக்கு புறப்பட்டது. குளித்தலை ரயில் நிலையத்திற்கு, 3:00 மணிக்கு வந்தது. தொடர்ந்து ரயில் புறப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது.
எதற்கு ரயில் நின்றிருக்கிறது என பயணிகள் தெரிந்து கொள்ள, ரயில்வே அலுவலரிடம் கேட்டனர். அவர் ஹிந்தியில் பேசியதால் பயணிகள் திணறினர். இந்நிலையில் அங்கு பணியில் இருந்த தமிழ் பேசும் பணியாளர் ஒருவர், 'லாலாபேட்டை ரயில் நிலையத்தில் புதிதாக இரண்டாவது தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், ரயில் நிறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
குளித்தலை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் முன்னரே உரிய அறிவிப்பு செய்திருந்தால், நாங்கள் ரயில் பயணத்தை தவிர்த்து, பஸ்சில் சென்றிருப்போம் என்றும், ரயில் கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் எனக்கூறி ரயில்வே அதிகாரியிடம் பயணிகள் வாக்கு
வாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த குளித்தலை போலீசார், ரயில் பயணிகளிடம் எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால், மேலும் அசம்பாவிதம் தடுக்கும் வகையில் அனைவரும் காத்திருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ரயில்வே துறையினரின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டினர்.
மூன்று மணி நேரம் தாமதமாக மாலை, 6:10 மணிக்கு குளித்தலை ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு விரைவு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது.
இதேபோல், திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் ரயில், பெட்டவாய்த்தலை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.