ADDED : ஜன 04, 2024 11:35 AM
வீரியபாளையத்தில் தார்ச்சாலை
மோசம்; மக்கள் கடும் அவதி
வீரியபாளையம் பஞ்சாயத்து பகுதியில் இருந்து, வயலுார் பிரிவு சாலை வரை தார்ச்சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் பஞ்சாயத்து அலுவலம் சாலை முதல், வயலுார் லட்சுமணம்பட்டி பிரிவு சாலை வரை தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது, தடுமாறுகின்றனர். ஆகையால் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல மாதமாக மூடப்பட்ட
கழிப்பிட வளாகம்
கரூர் அருகே, வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், பல மாதங்களாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகாலை நேரத்தில் திறந்த வெளியிடங்களை கழிப்பிடங்களாக, பயன்படுத்தி கொண்டு அவதிப்படுகின்றனர். மேலும், மூடப்பட்டுள்ள கழிப்பிடத்தின் கட்டடமும், பழுதடைந்து வருகிறது. இதனால், வாங்கல் பகுதியில் சுகாதார கேடும், தொற்று நோய் பரவுவதை தடுக்க, கழிப்பிடத்தை உடனடியாக திறக்கும் வகையில், வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு போர்டை மாற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, வெங்கமேடு பிரிவில், ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் வாகனங்கள் நின்று செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில், விழிப்புணர்வு போர்டு உள்ளது. தற்போது, போர்டு பழுதடைந்த நிலையில், எந்நேரமும் கீழே விழும்படி உள்ளது. அதை ரயில்வே துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், அப்பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மேம்பாலம் கீழே உள்ள, பழுதடைந்த விழிப்புணர்வு போர்டை, உடனடியாக மாற்றி வைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.