ADDED : ஜன 05, 2024 11:16 AM
பிள்ளபாளையம் பகுதியில்
சாலை துாய்மை பணி தீவிரம்
பிள்ளபாளையம் பஞ்சாயத்து, மங்கம்மாள் சாலையில் துாய்மை பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலை பிள்ளபாளையம் பகுதியில் இருந்து, வீரவள்ளி வரை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும், அதிகமான செடிகள் வளர்ந்து வந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, சாலையோரம் வளர்ந்த செடிகள் முழுவதும் அகற்றும் பணி துரிதமாக நடந்தது. இந்த பணிகள் மூலம் சாலை துாய்மையாக காணப்பட்டது.
100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு
சம்பளம் விரைந்து வழங்க கோரி மனு
நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் விரைவாக வழங்க கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்டம் முழுவதும் உள்ள பஞ்சாயத்துகளில் பணி செய்து வரும், நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் விரைவாக வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் மனு அளித்தனர்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து
வார்டுகளில் கொசு ஒழிப்பு பணி
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழ் அக்ரஹராம், கடைவீதி ஆகிய பகுதிகளில் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிந்து அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல் ஆகிய பணிகளில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும், மழை காலங்களில் நீர் தேங்காமல் இருக்கும் வகையில், மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பணிகளை டவுன் பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பார்வையிட்டார்.