ADDED : ஜன 29, 2024 12:41 PM
கழிவுநீர் வாய்க்காலை
துார்வார வலியுறுத்தல்
கரூர் அருகே, வெள்ளாளப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. தற்போது, வாய்க்காலில் பல இடங்களில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் வாய்க்காலில் அதிகளவில் செடிகள் முளைத்துள்ளன. இதனால், வாய்க்காலில் அடைப்பு காரணமாக கழிவுநீர் மற்றும்
மழை நீர் செல்லாமல் தேங்கியுள்ளது. அதில், கொசு உற்பத்தி ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை துார்வார, கரூர் மாநகராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ேலம் நெடுஞ்சாலையில்
தடுப்பு அமைக்க கோரிக்கை
கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் பல்வேறு கிராமப்பகுதிகளை இணைக்கும் பகுதிகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. மேலும், சாலையோரத்தில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன. அதற்கு முன் தடுப்புகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு பள்ளங்கள் தெரிவது இல்லை. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, கரூர் --- சேலம் சாலையில் தளவாப்பாளையம் பிரிவில், மேம்பாலம் கட்டும் நிலையில், பல விபத்துகள் நடந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். இதனால், தடுப்பு வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணியர் நிழற்கூடம்
அமைக்க வேண்டும்
கரூர் -- வெள்ளியணை சாலை, வெங்ககல்பட்டியில், 200க்கும்
மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அப்பகுதி சாலையில் பயணியர் நிழற்கூடம் இல்லை. பலமுறை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், அரசுத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மழைக்காலத்திலும்,
வெயில் காலத்திலும் நீண்ட நேரம் நின்றுகொண்டு அவதிப்படுகின்றனர். எனவே, வெங்ககல்பட்டி பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.