ADDED : பிப் 15, 2024 11:34 AM
அக்ரஹாரம் சாக்கடை கால்வாயை
துார் வார வேண்டியது அவசியம்
சாக்கடையில் அடைத்துள்ள கழிவுகளை எடுத்து, துார்வார வேண்டும்.
கரூர் அருகே, வாங்கல் அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவு நீர் வாய்க்கால், பல மாதங்களாக துார்வாரப்படவில்லை. இதனால், கழிவுநீர் தேங்கிய நிலையில் உள்ளது. அதில், துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மழை பெய்யும் நாட்களில், கழிவுநீருடன் மழை நீர் சேர்ந்து, சாலையில் ஓடிய வண்ணம் உள்ளது. எனவே, தொற்றுநோய்கள் ஏற்படும் முன், வாங்கல் அக்ரஹாரத்தில் உள்ள சாக்கடை கால்வாயை துார் வார, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடைந்த தடுப்பு கம்பிகளால்
ஓட்டுனர்களுக்கு சிக்கல்
கரூர் பஸ் ஸ்டாண்ட், ஜவஹர் பஜாரில் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கிளை சிறை, தீயணைப்பு நிலையம் மற்றும் வங்கிகள் உள்ளன. இதற்காக, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு, இடையிடையே கம்பிகள் போடப்பட்டது. தற்போது, பல இடங்களில் கம்பிகள் உடைந்துள்ளது. அதை, நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். சாலை குறுக்கே செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, கரூர் ஜவஹர் பஜாரின், சாலையின் நடுவே உள்ள, தடுப்பு சுவர்களை சீரமைத்து, உடைந்த நிலையில் உள்ள கம்பிகளை, உடனடியாக மாற்ற வேண்டும்.
குப்பை கழிவுகளை அகற்ற
மக்கள் வேண்டுகோள்
கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், சுற்று வட்டார பகுதிகளில், வீடுகளும் உள்ளது. கடந்த சில நாட்களாக மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் பெரும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பை நிறைந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும், குப்பை அழுகாத வகையில், நாள்தோறும் அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
