ADDED : பிப் 16, 2024 11:48 AM
சின்டெக்ஸ் தொட்டியின்
சுவிட்ச் போர்டு பழுது
கிருஷ்ணராயபுரம் அடுத்த, புனவாசிப்பட்டியில் இருந்து நரசிங்கபுரம், கொம்பாடிப்பட்டி பிரிவு நான்கு சாலை சந்திப்பு அருகில், போர்வெல் அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக, குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொட்டிக்கு நீர் ஏற்றும் மின்மோட்டார் சுவிட்ச் போர்டு கீழே விழுந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் ஏற்றுவதில் சிக்கல் இருந்து வருகிறது. ஆகையால், சுவிட்ச் போர்டை பழுது பார்த்து முறையாக மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை நீர் சேமிப்பு குழி
அமைக்கும் பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி கிராமத்தில் இருந்து இரும்பூதிப்பட்டி பிரிவு சாலை வரை கிராம தார்ச்சாலை செல்கிறது. தற்போது, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பாப்பகாப்பட்டி கிராம சாலையோர பகுதிகளில், மழை நீர் சேமிக்கும் வகையில் சேமிப்பு குழிகள் அமைக்கும் பணி நடந்தது. 100 நாள் திட்ட தொழிலாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். மழை நீர் சேமிப்பு குழிகள் மூலம், மழை காலங்களில் மழை நீர் சாலையோரம் இடங்களில் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பாக அமையும். மேலும், விவசாய கிணறுகளுக்கு நீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில்
ஏலத்தில் வாழைத்தார்கள் விற்பனை
லாலாப்பேட்டையில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை, பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி
செய்து வருகின்றனர். இதில் பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ஆகிய
ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் விற்கப்படுகிறது. நேற்று பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.