ADDED : பிப் 18, 2024 10:37 AM
நிழற்கூடத்தில் பஸ்களை
நிறுத்த நடவடிக்கை தேவை
கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள வெள்ளியணையில், பொதுமக்கள் வசதிக்காக, பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பஸ்களை பயணிகள் நிழற்கூடம் அருகே நிறுத்தாமல், டிரைவர்கள் தள்ளி நிறுத்துகின்றனர். இதனால், புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடம் முன், கார், வேன், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், வெள்ளியணையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகள் நிழற்கூடம் முன், பஸ்களை நிறுத்த,
போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலாயுதம்பாளையத்தில் குப்பை
எரிப்பதை தடுக்க வேண்டும்
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, வேலாயுதம்பாளையம் பகுதிகளில், பொது மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் மீது சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால், வேலாயுதம்பாளையம் சாலை, நாள்தோறும் புகை மண்டலமாக உள்ளது. அப்பகுதி வழியாக செல்வோர் அவதிப்படுகின்றனர். மேலும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதை, புகழூர் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், புகை மூட்டத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பொதுமக்கள் குப்பைகளை கொட்டும் வகையில், தொட்டிகளை வைக்க புகழூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்டர் மீடியனை பெரிதாக்க
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா
கரூர் அருகே, ஐந்து சாலை பிரிவில் போக்குவரத்து வசதிக்காக சென்டர் மீடியன் சிறிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வாங்கல், நெரூர், நாமக்கல் மாவட்டம் மோகனுார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கிறது. இதனால் வாங்கல், பசுபதிபாளையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக, அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட புதிய பாலத்தின், இணைப்பு சாலை பகுதியில் சென்டர் மீடியன் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சென்டர் மீடியனை பெரிதாக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.