ADDED : பிப் 19, 2024 12:16 PM
கரூர் பஸ் ஸ்டாண்ட்
கழிப்பிடத்தில் 'கப்பு'
தமிழகத்தில், 'ஏ' கிரேடு அந்தஸ்து பெற்ற பஸ் ஸ்டாண்டுகளில், கரூர் பஸ் ஸ்டாண்டும் இடம் பெற்றுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் இலவச கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், நாள்தோறும் கழிப்பிடத்தை சுத்தம் செய்வது இல்லை. இதனால், கழிப்பிடத்துக்கு செல்லவே பயணிகள் தயங்குகின்றனர். கழிப்பிடத்தில் இருந்து கழிவுநீர் பஸ் ஸ்டாண்டில் பாய்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நாள்தோறும் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருளில் மூழ்கி கிடக்கும்
ஆர்.டி.ஓ., அலுவலக சாலை
கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக சாலையில், 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டு, உயர்மட்ட கம்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. தற்போது, இந்த மின் விளக்குகள் பெரும்பாலும் எரிவது இல்லை. இதனால் அந்த சாலை இருளில் மூழ்கி உள்ளது. சர்ச்சு, பள்ளி, வணிக நிறுவனங்கள் உள்ள இந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், கும்ப கர்ண துாக்கத்தில் உள்ளது. மின்விளக்குகளை எரிய வைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
குப்பை கொட்ட
தொட்டி வேண்டும்
கரூர் - திருச்சி பழைய சாலை எஸ்.வெள்ளாளப்பட்டியில், ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால், அப்பகுதிகளில் குப்பை கொட்ட சேகரிப்பு தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால், சாலையோரம் கொட்டிச் செல்லும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர். இதனால், எஸ்.வெள்ளாளப்பட்டியில் தேங்கியுள்ள குப்பைகளை நாள்தோறும் அகற்ற வேண்டும். மேலும், குப்பை தொட்டிகளை வைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
