/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கணினியில் வாக்காளர் படிவம் பதிவேற்றும் பணி
/
கணினியில் வாக்காளர் படிவம் பதிவேற்றும் பணி
ADDED : நவ 18, 2025 01:28 AM
கரூர், ''வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளில், 400க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்,'' என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்தார்.கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள, 4 சட்டசபை தொகுதிகளிலும் நவ., 4 முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வீடு வீடாக சென்று வழங்கி, வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற்று வருகின்றனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் வரை, கணக்கெடுப்பு படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜென்டுகள் பெற்று வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதனடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுக்குச்சாவடி ஏஜென்டுகள் படிவங்களை சமர்ப்பிக்கும் போது 'என்னால் வழங்கப்படும் தகவல் அனைத்தும் என் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது' என உறுதி அளிக்கிறேன். தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டனைக்கு உரியது என்பதை அறிவேன் என்ற உறுதிமொழியும் அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள் மூலம் பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் டிஜிட்டல் வடிவமாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்பிக்க வேண்டும்.
வாக்காளர் பதிவு அலுவலர் அந்த படிவங்கள் மீது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வார். தற்போது வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடக்கிறது. இதில், அனைத்து துறை கணினி இயக்குபவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் உட்பட, 400க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் தாசில்தார் விஜயா உடனிருந்தார்.

