/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உழவரைத்தேடி வேளாண் திட்டம் தொடக்கம்
/
உழவரைத்தேடி வேளாண் திட்டம் தொடக்கம்
ADDED : மே 30, 2025 01:38 AM
கரூர்:கரூரில், உழவரைத்தேடி வேளாண் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில், 38.22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் 'உழவரைத்தேடி வேளாண், உழவர் நலத்துறை திட்டம்' தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் பங்கேற்று, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின், அவர் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின், உழவர்களைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை எனும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில், முதற்கட்டமாக திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள, 200 கிராமங்களில் முகாம் நடக்கிறது. இதன் நோக்கம், விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன், திட்டங்களையும் ஒருங்கிணைத்து, மாதம் இருமுறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமை) ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள இரு கிராமங்களில் நடக்கிறது. விவசாயிகள் அரசு அலுவலகங்களுக்கு சென்ற நிலை மாறி, அரசு அலுவலர்கள் விவசாயிகளை தேடி அவர்களுடைய கிராமங்களுக்கே வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுடைய கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றுவதுடன், அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க முடியும்.
இவ்வாறு கூறினார்.
பின், 50 பயனாளிகளுக்கு, 38.22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கரூர் எம்.பி.,ஜோதிமணி, வேளாண் துறை இணை இயக்குனர் சிவானந்தம், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்) உமா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.