ADDED : ஜூலை 03, 2026 04:33 AM

கரூர்:கரூர்
மாவட்டம், வெள்ளியனை பஞ்., அலுவலக வளாகத்தில், 'விபிஜி ராம் ஜி'
திட்ட தொடக்க விழா நடந்தது.
கலெக்டர் முத்துக்குமரன் தொடங்கி வைத்த
பின், கூறியதாவது:'விபிஜி ராம் ஜி' புதிய திட்டத்தின் கீழ், கிராம
பகுதிகளில் திறன் தேவைப்படாத உடல் உழைப்பு பணிகளை மேற்கொள்ள
விருப்பமுள்ள, வயது வந்த உறுப்பினர்களை கொண்ட ஒவ்வொரு கிராமப்புற
குடும்பத்திற்கும், ஆண்டுக்கு, 125 நாட்கள் வேலைவாய்ப்பு
அளிக்கப்படுகிறது. வேலை செய்ததற்கான ஊதியம் குறிப்பிட்ட
காலத்திற்குள் வழங்கப்படாவிடில், அதற்கான தாமத ஊதிய இழப்பீடு
சட்டப்படி வழங்கப்படும். விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள் வேலை
வழங்காத பட்சத்தில், பயனாளிகளுக்கு தகுந்த வேலையின்மை உதவித்தொகை
வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
8 மணி நேரம் பணி
உச்ச வேளாண்
பருவங்களில், 60 நாட்கள் விடுப்பு. பெண்கள், முதியவர்கள், மாற்றுத்
திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கென
தனியான கட்டண அட்டவணை இறுதி செய்யப்படும். மதிய உணவுக்கான, 1 மணி
நேரம் உட்பட 8 மணி நேர பணி வழங்கப்படும். நம்பகத் தன்மையை உறுதி செய்ய
முக அங்கீகாரத்துடன் கூடிய கணினி அமைப்பு செயலி மற்றும்
வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.
வங்கி கணக்கில் பணம்
பயனாளிகளின்
ஊதியம் மற்றும் இதர நிதியுதவி அனைத்தும், எவ்வித தாமதமுமின்றி
நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் பரிமாற்ற முறையில்
செலுத்தப்படும். இதனால் இடைத்தரகர்களின் இடையூறோ, ஊதியம் பெறுவதில்
குறைபாடோ இருக்காது. ஊதியம், பொருள் மற்றும் நிர்வாகக் கூறுகளில்
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பகிர்வு 60:40 என்ற
விகிதத்தில் உள்ளது. வேலைவாய்ப்பாக மட்டும் இல்லாமல்,
கிராமப்புறங்களில் நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த
வாழ்வாதார சொத்துக்களை உருவாக்குவதில் இத்திட்டம் கவனம்
செலுத்துகிறது.
318 வகையான பணி
மேலும் நீர் பாதுகாப்பு பணி,
அடிப்படை ஊரக கட்டமைப்பு பணி, ஊரக வாழ்வாதார பணி மற்றும் பேரிடர்
மேலாண்மை பணி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம், 318 வகையான பணிகள்
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
