/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அருகே வாலிபர் தலை துண்டித்து படுகொலை
/
குளித்தலை அருகே வாலிபர் தலை துண்டித்து படுகொலை
ADDED : டிச 18, 2024 07:12 AM
குளித்தலை: குளித்தலை அருகே, மேட்டு மகாதானபுரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், வாலிபர் சடலம் மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரத்தில், கட்டளை மேட்டு வாய்க்கால் மேற்கு பகுதி நடு கரையோரம், நேற்று மதியம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.
சம்பவ இடத்தில் குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் லக்கி சிறிது துாரம் ஓடிய பின் நின்று விட்டது. நாய் நின்ற இடத்தின் அருகே, இரு வாய்க்கால்களை இணைப்பதற்கான குமுளி செல்கிறது. இதனால் குமுளியில் அவரது தலை வெட்டி வீசப்பட்டுள்ளதா என்பது குறித்து கண்டறிய, முசிறி தீயணைப்பு துறை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தலை கொடூரமாக துண்டிக்கப்பட்டு கிடந்த நபர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த இனுங்கனுார் கிராமத்தை சார்ந்த காளிதாஸ், 32, என்பதும், அவரது தாய், தந்தையர் கர்நாடகாவில் உள்ள மகள் வீட்டில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
காளிதாஸ் தன்னுடைய பெயரை, கையில் பச்சை குத்தியுள்ளார். இதை வைத்து போலீசார் கொலையான நபரை கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது கரூர், அரவக்குறிச்சி, அரியலுார் போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மாலை, 6:00 மணியளவில் கரூர் மாவட்ட எஸ்.பி..பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்தை பார்வையிட்டார். குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.