/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியத்தால் ஓசூரில் பணிகள் நடக்கவில்லை'
/
'மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியத்தால் ஓசூரில் பணிகள் நடக்கவில்லை'
'மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியத்தால் ஓசூரில் பணிகள் நடக்கவில்லை'
'மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியத்தால் ஓசூரில் பணிகள் நடக்கவில்லை'
ADDED : பிப் 28, 2025 01:49 AM
'மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியத்தால் ஓசூரில் பணிகள் நடக்கவில்லை'
ஓசூர்:ஓசூர் மாநகராட்சிக்கு, நேற்று உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 'பணி நடக்கவில்லை' என, துணை மேயர் குற்றம்சாட்டினார். அதை ஒப்புக்கொள்ளும் விதமாக, ''அலுவலர்கள் அலட்சியத்தால் தான், பணி நடக்கவில்லை,'' என, மேயர் சத்யா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் பூங்கொடி அருமைக்கன் முன்னிலை வகித்தனர். 2025 - 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாநகராட்சிக்கு நடப்பாண்டிற்கு, வருவாய் மற்றும் மூலதன வருவாய் மூலம், 363.39 கோடி ரூபாய் வரும் என்றும், ஊதியம், திட்ட பணிகள் மற்றும் இதர செலவுகள் என, 362.96 கோடி ரூபாய் செலவாகும் எனவும், 97.12 லட்சம் ரூபாய் உபரியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன்: அமைச்சர் கூறியதையும் மீறி, குப்பை வரி செலுத்தவில்லை என, ஜப்தி நோட்டீஸ் வழங்குகின்றனர். அதில் பிரச்னை வந்தால், உதவி கமிஷனர் டிட்டோ விடுமுறையில் சென்று விடுகிறார். பாகலுார் சாலை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விவசாய நிலத்தில் கட்டிய கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பதில்லை. ஆனால், மின் இணைப்பு வழங்குகின்றனர். விவசாய நிலத்தில் கட்டடங்கள் கட்டியிருந்தால் வரி வசூலிக்க வேண்டும்.
மேயர் சத்யா: பாகலுார் சாலை டெண்டர் வரும், 7 ம் தேதி விட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மார்ச், 18 ல், திருச்சிக்கு கவுன்சிலர்கள் அழைத்து செல்லப்பட்டு, அதிகாரிகள் மூலம் மாநகராட்சி நிர்வாகம், செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படும். விவசாய நிலங்களில் உள்ள கட்டடங்களுக்கு வரி விதிக்காமல், எப்படி மின் இணைப்பு வழங்கலாம் என கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி மின்வாரியத்திற்கு அனுப்பியுள்ளோம்.
அ.தி.மு.க., குபேரன்: சிறுவர் பூங்காக்கள் பராமரிப்பின்றி உள்ளன எனக்கூறி, 3 ஆண்டுகளாகிறது. வீட்டு வரியை குறைத்து போட, லஞ்சம் கேட்கின்றனர்.
மேயர்: பூங்காக்களை பராமரிக்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் இல்லாததால் கையெழுத்திட முடியாமல் உள்ளன.
கமிஷனர்: எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால், லஞ்சம் கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து பேசிய, அ.தி.மு.க., கவுன்சிலர் சிவராம், மூக்கண்டப்பள்ளி போர்வெல்களில் பச்சை, மஞ்சள் நிறத்தில் கெமிக்கல் கலந்த குடிநீர் வருகிறது எனக்கூறி, தான் கொண்டு வந்த நீரை காட்டினார். தொடர்ந்து பேசும் போது, 'பெரிய அளவில் போர்வெல் அமைத்து, அதற்குள் தனியார் நிறுவனங்கள் கழிவு நீரை விடுகின்றன. அதனால் எங்கள் வார்டிலுள்ள, 270 க்கும் மேற்பட்ட போர்வெல்களில் நிலத்தடி நீர் பாதித்துள்ளது. 4 நிறுவனங்கள் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. சிப்காட்டிற்குள் ஒரு தனியார் நிறுவனம் போர்வெல் போட்டது. அதை தட்டி கேட்டால், அமைச்சர் அனுமதியுடன் தான் போடுகிறோம் என்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைதியாக இருக்கிறது' என்றார்.
கமிஷனர்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனங்களில் சோதனை செய்யப்படும்.
துணை மேயர் ஆனந்தய்யா: மாநகராட்சியை அழகுப்படுத்த வேண்டும். ஓசூரிலிருந்து, கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையோர கழிவுநீர் கால்வாய்களை தேசிய நெடுஞ்சாலை துறை சுத்தம் செய்வதில்லை. பாதாள சாக்கடை திட்டபணியின் போது, குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர். அதை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். மாநகராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடப்பதில்லை.
தி.மு.க., கவுன்சிலர் சசிதேவ் பேசும் போது, புதிய போர்வெல்லுக்கு, 4 மாதமாக மின் இணைப்பு வழங்காமல் இருக்கிறது என்றார். அதற்கு பதிலளித்த மேயர் சத்யா, 'மாநகராட்சி அலுவலர்கள் அலட்சியத்தால் தான், பணி நடக்காமல் உள்ளது' என்றார்.
கவுன்சிலர்கள் சென்னீரப்பா, மாரக்கா, இந்திராணி, மஞ்சுநாத், நாகராஜ் உட்பட பலர் பேசினர்.