/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய பாலங்கள் கட்ட உத்தரவு சுற்றுப்பயணத்தில் அமைச்சர் அதிரடி
/
புதிய பாலங்கள் கட்ட உத்தரவு சுற்றுப்பயணத்தில் அமைச்சர் அதிரடி
புதிய பாலங்கள் கட்ட உத்தரவு சுற்றுப்பயணத்தில் அமைச்சர் அதிரடி
புதிய பாலங்கள் கட்ட உத்தரவு சுற்றுப்பயணத்தில் அமைச்சர் அதிரடி
ADDED : ஜூலை 26, 2011 12:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணையின் இடது புறகால்வாய் பகுதியில், குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில் பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதி எம்.எல்.ஏ.,வும் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான முனுசாமி, கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, பொதுமக்களை சந்தித்து நன்றி கூறி அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். நேற்று, கிருஷ்ணகிரி யூனியன் பெரியமுத்தூர், தேவசமுத்திரம், அகச்சிப்பள்ளி, பெத்தனப்பள்ளி ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த 63 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களின் கோரிக்கைகளை அமைச்சர் கேட்டறிந்தார். கருக்கன் கொட்டாய், ஆண்டிக்கொட்டாய் பகுதியில் கே.ஆர்.பி., அணையில் இருந்து, அவதானப்பட்டி ஏரிக்கு செல்லும் இடது புற கால்வாயின் இரு பகுதிகளிலும் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால், கால்வாயை கடந்து செல்ல கூடுதலாக பாலம் வசதியும், அந்த பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரும் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கால்வாயில் உள்ள பாலங்களை அகலப்படுத்தவும், புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமாரிடம் உத்தரவிட்டார். அகச்சிப்பள்ளி மற்றும் பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துகளில் உள்ள கிராமங்களில் முதியோர் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதிகள் ஆகியவை கோரி மனுக்கள் வழங்கப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், தகுதியுள்ள அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களின் அடிப்டை தேவைகளான குடிநீர் மற்றும் சாலை வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருப்பாளர்கள் அசோக்குமார், காத்தவராயன், ஒன்றிய பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், ஜெயவேல், எர்ரஅள்ளி பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.