/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானைகள் உலாவால் சுற்றுலா பயணிகள் அச்சம்
/
யானைகள் உலாவால் சுற்றுலா பயணிகள் அச்சம்
ADDED : பிப் 20, 2025 01:40 AM
யானைகள் உலாவால் சுற்றுலா பயணிகள் அச்சம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனச்சரகத்தில், 50க்கும் மேற்பட்ட நிரந்தர யானைகள் உள்ளன. அஞ்செட்டி வனத்திற்கு நடுவே தான், ஒகேனக்கல் செல்ல தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சென்றால், வனத்தின் அழகை ரசித்து செல்லலாம் என்பதால், ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள், இச்சாலையில் தான் அதிகமாக பயணிக்கின்றனர். மாலை, 6:00 மணிக்கு மேல் இச்சாலையை யானைகள் கடக்கும் என்பதால், அந்த நேரத்தில் பயணிக்க வேண்டாமென, வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். ஆனால், அதையும் மீறி அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். இச்சாலையில், பகலில் யானைகள் வருவது குறைவு. ஆனால், சமீப காலமாக, பகலிலும் யானைகள் கடந்து செல்வது அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் காலையில், கேரட்டி அருகே ஒற்றை பெண் யானை சாலையில் முகாமிட்டு, அங்கிருந்த மரத்தின் இலைகளை சாலையில் நின்றவாறு சாப்பிட்டது. இதை பார்த்து அச்சாலையில் சென்ற அரசு பஸ் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, யானை செல்லும் வரை காத்திருந்து, அதன் பின் சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதிக்கு நடுவே தார்ச்சாலை உள்ளதால், யானைகள் சாலையை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான். வனத்தில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் பகல் நேரங்களில் கூட சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்கின்றன. வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும்' என்றனர்.

