/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தலை புறக்கணித்து சாலைமறியல்
/
தேர்தலை புறக்கணித்து சாலைமறியல்
ADDED : ஏப் 02, 2024 04:53 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை பஞ்., உட்பட்ட கூச்சுவாடி மற்றும் நெல்குந்தி, கோவகுட்டை, அத்திமரத்துப்பள்ளம், குடியூர் ஆகிய கிராமங்களில், கடும் வறட்சியால் போர்வெல்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளன.
வனப்பகுதியை ஒட்டிய இக்கிராமங்களில், புதிய போர்வெல் அமைக்க வனத்துறை அனுமதி அவசியம்; ஆனால் வனத்துறை அனுமதி வழங்காததால், பயிர்கள் காய்ந்து வருகின்றன. மக்களும் குடிநீரின்றி தவிக்கின்றனர். 6 பழைய போர்வெல்களை, 'ரீ போர்' போட வனத்துறை அனுமதி வழங்கியது.
ஆனால், அதில் ஒரு போர்வெல்லில் மட்டுமே தண்ணீர் வந்தது. இதனால், புதிய போர்வெல்கள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், வனத்துறை அனுமதி அளிக்காததால், கிராம மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும், தேன்கனிக்கோட்டையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி முன், அஞ்செட்டி சாலையில் அமர்ந்து பொதுமக்கள் நேற்று காலை, 11:15 முதல், 12:00 மணி வரை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய போர்வெல் அமைக்க அனுமதி தர வேண்டும் என கோஷமிட்டனர்.
தாசில்தார் பரிமேலழகர், டி.எஸ்.பி., சாந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், புதிய போர்வெல் அமைக்க அனுமதிக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என மக்கள் தெரிவித்தனர்.
கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், மறியலில் ஈடுபட்ட, 50 க்கும் மேற்பட்டோரை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர். பின் மாலையில்
விடுவித்தனர்.

