ADDED : ஏப் 09, 2025 01:32 AM
யானைகளால் வாழை தோட்டம் நாசம்
தேன்கனிக்கோட்டை:தளி அருகே, வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானைகளால், 100க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வீணாகின.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே கும்ளாபுரம் வனத்திலிருந்து வெளியேறிய, 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு ஆருப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிரெட்டி என்பவரது வாழை தோட்டத்திற்குள் புகுந்து, வாழை மரங்களை நாசம் செய்த யானைகளால், 100க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வீணாகின. அதேபோல், சதீஷ்ரெட்டி என்பவரது, 2.50 ஏக்கர் வெள்ளரி தோட்டம், நாராயணரெட்டியின் தோட்டத்தில் பறித்து வைத்திருந்த, 20 மூட்டை சுரைக்காய் ஆகியவற்றை யானைகள் தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயிகள், பயிர்கள் சேதமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். யானைகள் நடமாட்டம் குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாலும், கண்டுகொள்வதில்லை என, விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
தளி சுற்றுப்புற கிராமங்களில், யானைகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு உடனடியாக இழப்பீட்டை வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

