/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 16, 2025 01:18 AM
மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ஓசூர்:ஓசூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்ய தவறிய, தி.மு.க., அரசை கண்டித்தும், ஓசூர் மின்வாரிய அலுவலகம் முன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி முன்னிலை வகித்தார். கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். அப்போது, பெண்களையும், ஹிந்து மதத்தையும் மிகவும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து அவரது படத்திற்கு, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், செருப்பு மாலை அணிவித்தும், அடித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள் குபேரன், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் நிருபர்
களிடம் கூறியதாவது:ஓசூர், எம்.ஜி.ஆர்., சந்தையை ஏலம் விடாததால், மாநகராட்சிக்கு, 20 கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வை சேர்ந்த மாநகர மேயர் தலைமையில் நடக்கும் மாநகராட்சி நிர்வாகம், 100 இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்தது. ஒன்றின் விலை, 1.80 லட்சம் ரூபாய். ஆனால், மாநகராட்சியில் பில்போட்டு எடுத்த தொகை, 4.50 லட்சம் ரூபாய். அதன்படி மாநகராட்சியில், 2.20 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
மேயர் வந்த பின், இதுவரை மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பழைய தெருவிளக்குகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்றினர். ஒன்றின் விலை, 2,000 ரூபாய். ஆனால், 8,000 ரூபாய்க்கு பில் போட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பன்னீர்செல்வம், பாலகிருஷ்ணாரெட்டி உட்பட, 950 பேர் மீது, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆர்ப்பாட்டத்தில், பொன்முடி உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து செருப்பால் அடித்தது தொடர்பாக, மீனாட்சியம்மாள், சீதாம்மாள், வசந்தா ஆகிய, 3 பேர் மீது தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

