ADDED : மே 20, 2025 02:15 AM
ஓசூர், ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இருந்து, சீத்தாராம் மேடு வரை இன்னர் ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், நகருக்குள் வரும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்துகின்றன. இந்நிலையில், ரிங்ரோட்டில் உள்ள மத்தம் அக்ரஹாரம் பகுதியில், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை மூடுவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளத்தில் ஜல்லி மற்றும் எம்.சாண்டை நேற்று முன்தினம் கொட்டினர்.
அவை சிதறி, சாலை முழுவதும் பரவி கிடப்பதால், அவ்வழியாக செல்லும், இரு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகன டிரைவர்கள் நிலைதடுமாறி வருகின்றனர். இச்சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகன ஓட்டிகள் ஜல்லி சிதறி கிடப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்தாண்டு தான் ரிங்ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. அதற்குள் சாலை மோசமாகி, பள்ளமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.