ADDED : ஜூலை 03, 2024 07:52 AM
ஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், ஜாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, மின்சாரம், குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் குமாரவடிவேல் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சண்முகம், கோரிக்கை குறித்து விளக்கினார். ஆர்ப்பாட்டத்தில், 2006 வன உரிமை சட்டபடி, பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். காவிரி தெற்கு வன விலங்கு சரணாலயம் என்ற பெயரில், காலம், காலமாக வாழ்ந்து வரும், பழங்குடியின மக்களை கிராமங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது. படித்து பட்டம் பெற்ற பழங்குடியின இளைஞர்களுக்கு தாமதமின்றி, அரசு வேலை வழங்க வேண்டும். சிறு தொழில் துவங்க மானிய கடன் வழங்க வேண்டும். பழங்குடியின மாணவ, மாணவியர் படிக்க உறைவிட பள்ளிகளை அமைக்க வேண்டும். கால்நடைகளை வனத்திற்குள் மேய்க்க அனுமதி வழங்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.