ADDED : பிப் 13, 2024 11:49 AM
ஓசூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்க, 22வது மாநில மாநாட்டையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பள்ளியில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடந்தது. கெலமங்கலம், தளி ஒன்றியத்தை சேர்ந்த, 43 அரசு பள்ளிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சாந்தி தலைமை வகித்தார். தளி ஒன்றிய கிளை தலைவர் குணசேகரன் வரவேற்றார். சென்னை, கணித அறிவியல் கழக ஓய்வு பேராசிரியர் ராமானுஜம், குழந்தைகளுடன் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க, மாநில செயலாளர் சேதுராமன், மாணவ, மாணவியருக்கு அறிவியல் அற்புதங்களை விளக்கும் 'மந்திரமா, தந்திரமா' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து, தொலைநோக்கி மூலம், வான் நோக்குதல் மற்றும் நடமாடும் பிளானட்டோரியம் கோளரங்க நிகழ்ச்சி நடந்து. மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோனதாஸ், செயலாளர் சந்தோஷ், முன்னாள் மாவட்ட தலைவர் சர்ஜான் உட்பட பலர் பங்கேற்றனர். தளி ஒன்றிய கிளை செயலாளர் குமார் நன்றி கூறினார்.