/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
14 நாளே ஆன பெண் குழந்தை அடித்து கொலை; தந்தை கைது
/
14 நாளே ஆன பெண் குழந்தை அடித்து கொலை; தந்தை கைது
ADDED : ஜூலை 06, 2024 08:23 AM
ஓசூர்: கெலமங்கலம் அருகே பிறந்து, 14 நாட்களே ஆன பெண் குழந்தையை, தந்தையே அடித்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்தவர் மாதையன், 46, கூலித்தொழிலாளி. இவரது மூத்த மனைவி முனியம்மா. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, 15 ஆண்டுக்கு முன் மனைவியை மாதையன் பிரிந்து விட்டார். தற்போது, முனியம்மா தன் குழந்தைகளுடன் தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கிறார்.
சின்னம்மா, 38, என்பவரை, 14 ஆண்டுகளுக்கு முன் மாதையன் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு, 12 வயதில் மகன், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.மீண்டும் கர்ப்பமடைந்த சின்னம்மாவிற்கு, 14 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், மாதையன் ஆத்திரமடைந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு சின்னம்மாவிடம், பச்சிளம் பெண் குழந்தையை கொன்று விடலாம். அப்போது தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என மாதையன் கூறியுள்ளார்.
இதற்கு சின்னம்மா மறுப்பு தெரிவிக்கவே, அவரை தகாத வார்த்தையால் திட்டி எட்டி உதைத்த மாதையன், அங்கு படுத்திருந்த, 14 நாட்களே ஆன பெண் குழந்தையை துாக்கியபடி வீட்டில் இருந்து வெளியே ஓடினார். அதிர்ச்சியடைந்த சின்னம்மா, அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து கணவர், குழந்தையை தேடி பார்த்தார். இரவு, 9:00 மணிக்கு மாதையன் தன் வீட்டின் அருகே உள்ள பாறையில் குழந்தையை போட்டு விட்டு தப்பியோடினார்.
இதை கவனித்த சின்னம்மா, பாறை மீது சென்று பார்த்த போது, குழந்தை அசைவின்றி கிடந்தது. இதனால், குழந்தையை கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
குழந்தையின் இடது கன்னத்தில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக, சின்னம்மா கொடுத்த புகார்படி, கெலமங்கலம் போலீசார், மாதையனை நேற்று பிடித்து விசாரித்தனர். அவர் குழந்தையை அடித்து கொன்றது தெரிந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.