/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
35,000 ஏக்கரில் 2ம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
/
35,000 ஏக்கரில் 2ம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
35,000 ஏக்கரில் 2ம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
35,000 ஏக்கரில் 2ம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
ADDED : ஜன 19, 2025 02:01 AM
35,000 ஏக்கரில் 2ம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணை மூலம், 8,000 ஏக்கர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மூலம் 9,012 ஏக்கர் பரப்பிலும் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிச.,வரை, முதல்போக பாசனத்துக்கும், ஜன., முதல் மே வரை 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, 2ம் போக பாசனத்துக்கு கடந்த டிச., 18ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல பாரூர் நீர்தேக்கத்திலிருந்தும் நீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவாக, 2ம் போக நெல் சாகுபடி, 25,000 ஏக்கர் பரப்பில் நடக்கும். நடப்பாண்டில் வழக்கத்தை விட, 20 சதவீத கூடுதல் மழை பெய்துள்ளதால், பல்வேறு நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால், 2ம் போக சாகுபடிக்கு விவசாயிகள் நெல் நடவு, நிலத்தை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:நடப்பாண்டில் வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்துள்ளதால் நீர்நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. எனவே, 2ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. அதேபோல அரசு வேளாண் துறை சார்பில் உள்ள நெல் ரகங்களுடன் தனியார் நெல் விற்பனை மையங்கள் மூலமும் ஆந்திர வகைகளான அமோகா, அக்சயா உள்ளிட்ட வகைகளையும் விதைத்து வருகிறோம். இவ்வருடம் அதிக மகசூலுடன் வருவாயும் கிடைக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கமாக, 25,000 ஏக்கர், 2ம் போக நெல் சாகுபடி நடக்கும். தற்போது பெய்த கனமழையால் காடு, மேடுகள் தோறும் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது போகி நாற்றும் விட்டுள்ளனர். பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தாலுகாக்களில் அதிக விவசாயிகள், உளுந்து, நிலக்கடலை சாகுபடியிலிருந்து மாற்று பயிராக நெல் பயிரிட்டுள்ளனர். நெல் சாகுபடி கணக்கெடுப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைந்த பின் சரியான அளவு தெரியும். வழக்கத்தை விட, 10 ஏக்கர் அளவில் கூடுதலாக, அதாவது, 35,000 ஏக்கர் அளவில், 2ம் போக நெல் சாகுபடி நடக்கலாம். மேலும், அரசு மற்றும் தனியார் நெல் விதை விற்பனை நிலையங்களில் இதுவரை, 182 டன் நெல் விதைகள் விற்பனையாகி உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

