ADDED : ஆக 30, 2024 01:45 AM
கிருஷ்ணகிரி, ஆக. 30-
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், சரக அளவிலான, 2 நாள் விளையாட்டு போட்டிகள், பெல்லாரம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் நேற்று துவங்கியது. முன்னதாக, கையுந்து பந்து, கைப்பந்து, எறிபந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து, டென்னிஸ், கேரம், கோ-கோ, கபடி, கால்பந்து, பூப்பந்து போன்ற, 14 வகையான போட்டிகள், 14, 17 மற்றும், 19 வயது பிரிவில் நடத்தப்பட்டன.
நேற்று தடகள போட்டியான, 100 மீட்டர், 200, 400, 600, 800, 1,500, 3,000, 5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்போட்டிகள், தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,079 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் துவக்கி வைத்தார். டி.இ.ஓ., சரவணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, தலைமை ஆசிரியர் மலர்கொடி, சரக துணை செயலர் வள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.
14 வகையான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களும், தடகள போட்டியில் முதல் மற்றும் 2ம் இடம் பிடிக்கும் மாணவ, மாணவியரும், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற உள்ளனர்.