ADDED : ஜூன் 18, 2024 11:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம் ஊராட்சி, பட்டவர்த்தியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கோவிந்தசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அங்கன்வாடி மைய அலுவலர் தீர்த்தம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2 இளம்பெண்கள் மாயம்
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த எரங்காடு பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ, 21; இவர் தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 15 அன்று முதல் அவரை காணவில்லை. பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல், பென்னாகரம் அடுத்த, பருவதனஹள்ளியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 25; பென்னாகரத்திலுள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் பணியாற்றி வந்தார். திருமணமாகி மகன், மகள் உள்ளனர். கடந்த, 15 அன்று முதல் ஐஸ்வர்யாவை காணவில்லை. கணவர் சஞ்சீவ்குமார் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் வாலிபர் பலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதகப்பாடியை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 30; மெடிக்கல் ரெப்பாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று தன் ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் காரிமங்கலம் சென்று விட்டு, தர்மபுரி திரும்ப ஓசூர் - தர்மபுரி புதிய தேசிய நெடுஞ்சாலையில் மாலை, 3 மணிக்கு வந்தார். சோகத்துார் அருகே, சாலையோர தடுப்பில் மோதி படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வி.சி.,யினர் கொண்டாட்டம்
அரூர்:லோக்சபா தேர்தலில், வி.சி., கட்சி, 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இதையொட்டி, அரூர் அடுத்த பெத்துாரில் கிராம மக்கள் அம்பேத்கர், திருமாவளவன் படங்களை வைத்து தேர் இழுத்தனர். தொடர்ந்து, மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்துச் சென்றனர். இதில் தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., செயலாளர் சாக்கன் சர்மா, நிர்வாகிகள் கேசவன், தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் மழை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாத துவக்கத்தில் மழை பெய்தது. பின்னர் கடந்த, 10 நாட்களாக மழை பெய்யாத நிலையில் நேற்று மாலை, 7:00 மணி முதல் ஒரு மணி நேரம் கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, ராயக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் காற்று இன்றி பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி நகரின் பல இடங்களில் ஒரு அடி முதல், 2 அடி வரை மழை நீர் தேங்கியது. சில இடங்களில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். நல்ல மழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.