/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா உரூஸ் திருவிழா
/
தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா உரூஸ் திருவிழா
ADDED : ஆக 05, 2024 01:50 AM
ஓசூர்,
தேன்கனிக்கோட்டையிலுள்ள பழமையான யாரப் தர்காவில், 75ம் ஆண்டு சந்தன குட உரூஸ் திருவிழா, 3 நாட்கள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, அலங்கரித்த யானை மீது, சந்தன குட ஊர்வலம் புறப்பட்டது. அலங்கார வண்டிகள், சிலம்பாட்டம், புக்ரா மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இசைக்க, மின் அலங்காரங்கள் மற்றும் பூ அலங்காரத்துடன் யானையின் மீது சந்தன குடத்தை வைத்து, தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, நேதாஜி சாலை, நேரு சாலை, மேல்கோட்டை உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, யாரப் தர்காவை வந்தடைந்தது. தொடர்ந்து, சந்தன பூச்சு, பூ அலங்காரம், பாத்தியா துவா நிகழ்ச்சிகள் நடந்தன.
அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், தளி ராமச்சந்திரன், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் மற்றும் தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான இஸ்லாமிய மற்றும் ஹிந்து மக்கள் வழிபாடு நடத்தினர். நேற்று யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, இசை கச்சேரிகள் நடந்தன.
தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.