/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
103 வயது சுதந்திர போராட்ட தியாகி மரணம்
/
103 வயது சுதந்திர போராட்ட தியாகி மரணம்
ADDED : ஆக 15, 2024 07:08 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகா, பெட்டமுகிலாளம் அருகே ஜெயபுரம் மலை கிராமத்தை சேர்ந்தவர் மரியசாமி கவுடா, 103; கடந்த, 1921 மே, 20 ல் பிறந்த இவர், காமராஜர், கக்கன், ராஜாஜி போன்ற தலைவர்களுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்; உப்பு சத்தியாகிரகம், தண்டியாத்திரையில் பங்கேற்றார்; கடந்த, 1952 - 1996 வரை, 45 ஆண்டுகள், பெட்டமுகிலாளம் பஞ்., தலைவராகவும், 10 ஆண்டுகள் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தார்.
5 ஆண்டுகள் கெலமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவராக பதவி வகித்தார். இவர் நேற்று அதிகாலை, 2:40 மணிக்கு வயது முதிர்வால் காலமானார்.ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, பெட்டமுகிலாளம் கிராமத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதை மரியசாமி கவுடா வழக்கமாக கொண்டிருந்தார். தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், அரசு சார்பில் தியாகி மரியசாமிகவுடா உடலுக்கு தேசியக்கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினார். அதேபோல், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், ஒரு நாளைக்கு முன்பாக அவர் மரணமடைந்தது, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்று மரியசாமிகவுடா உடல், அவரது நிலத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.